இஸ்லாத்தின் பார்வையில்... சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
மனிதன்
தொடங்கி உலகில் நாம் காணும் சகல படைப்புகளும் இறைவனுக்கு மட்டுமான
அடிமைகள் ஆவார்கள். அது தவிர்த்து மனிதனுக்கு மனிதன் அடிமை என்பதை உலகின்
எல்லா மதங்களும் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
மனிதநேயமும், மனிதாபிமானமும் ஆன்மிகப் பாதையின் படிக்கட்டுகள். மனிதனின்
தன்மானத்துக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மனிதநேயத்தை தகர்க்கும்
செயல்களாகும் என்கிறது இஸ்லாம்.நடைபாதையில் கிடக்கின்ற சிறிய கற்களை, முற்களை, எலும்புகளை, கண்ணாடி துண்டுகளை, மனிதனுக்கு நோவினை தரும் அனைத்தையும் அகற்றுவது மனிதநேயமிகு செயல்கள் என்பது மட்டுமல்ல, ஒரு முஸ்லீம் ஏற்றுள்ள இறை நம்பிக்கையின் பரிபூரணத்திற்கான சேவைகள் என நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அடிமையும், அடிமைத்தனமும் நம்மை படைத்து பாதுகாக்கிற எஜமானன் ஒருவனாகிய இறைவனின் புனிதம் நிறைந்த தெய்வாதீனமான சன்னிதானத்திற்கு மட்டுமே உரித்தானதாகும்.
மாறாக சாதி, மதம், இனம், நிறம், மொழி, வயது, மற்றும் செல்வாக்கு போன்ற பாகுபாடுகளை மையப்படுத்திய அடிமைத்தனம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை இஸ்லாம் தான் தோன்றிய காலம் தொட்டே உலகிற்கு உரக்கச் சொல்லி வருகிறது.
நபிமார்களான இறைவனின் தூதர்கள் வேதங்கள் கொடுக்கப்பட்டு இவ்வுலகிற்கு ஏகத்துவப் பிரசாரத்திற்காக மட்டும் அனுப்பப்படவில்லை என்பதை பல நபிமார்களின் சரித்திரங்கள் சொல்கிறது.
நபி மூஸா (அலை) அவர்களுக்கும், கொடுங்கோலன் பிர்அவ்னுக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடலை இறைவன் அப்படியே குர்ஆனில் சொல்வதைக் காண முடிகிறது.
பிர்அவ்னின் அரசவைக்குள் ஏகத்துவக் கொள்கைப் பிரசாரத்திற்கு அழைப்பு விடுத்த சமயத்தில் ‘பிர்அவ்னே ஏறக்குறைய நீ ஆறு லட்சம் யூதர்களை அடிமைப்படுத்தி இருக்கிறாய் அவர்களை விடுதலை செய்’ என்றார்கள். அடிமைப்பட்டு கிடக்கின்ற மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஹஜ்ரத் மூஸா (அலை) அவர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.
நபிமார்கள், மனிதனை இறைவனோடு சங்கமிக்க செய்கிற தூதுவர்கள் மட்டுமல்ல. தனக்கு தேவையான சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்தி தருகிற மனித நேய காப்பாளர்களாகவும் நபிமார்கள் செயல்பட்டனர்.
நபிதோழர் அபூதர் (ரலி) அவர்கள் ஒரு அழகான சால்வை அணிந்து தனது இல்லத்தில் அமர்ந்து இருந்தார்கள். அதே போன்ற சால்வையை அவர்களின் அடிமையும் போர்த்திய நிலையில் அவர் அருகே இருந்தார்.
இதைப் பார்த்த மஹ்ரூர் இப்னு சவீத் என்பவர், ‘அபூதர்ரே உங்களைப் போன்றே உங்கள் அடிமையும் சால்வை அணிந்து இருக்கிறாரே, அதை அவர் அகற்றி விட்டால் நன்றாய் இருக்குமே. அப்படி இருந்தால் நீங்கள் மட்டும் தனியாக அலங்காரமாக இருப்பீர்கள்’ என சொன்னார்.
அப்போது உடனே அவர் இவ்வாறு கூறினார்:
‘அடிமைகள் உங்களின் உடன்பிறவா சகோதரர்கள். அந்த சகோதரருக்கு நீங்கள் உண்ணுகிற உணவையே சாப்பிட தாருங்கள். நீங்கள் அணிகிற உயர்தர ஆடைகளைப் போன்றே ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கட்டும். அவரின் சக்திக்கு உட்பட்ட வேலைகளையே அவரிடம் வாங்க வேண்டும். ஒருவேளை சக்தி மீறிய வேலையாக இருந்தால், அவருக்கு ஒத்தாசையாக உதவி செய்யுங்கள்’ என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிஇருக்கிறார்கள். அடிமைகள் குறித்து உபதேசித்த வார்த்தைகளையே நான் உங்களுக்கு மறுமொழியாகச்சொல்கிறேன் என்றார் நபிதோழர் அபூதர் (ரலி) அவர்கள்.
அடிமைத்தனம் என்பது அறவே கூடாது. ஒருவேளை அடிமைகள் இருப்பின், சகமனிதனுக்கான அத்துனை உரிமைகளையும் கொஞ்சமும் குறையில்லாமல் நிறைவாக தந்து மனிதநேயத்தை காப்பாற்றுவது கட்டாயம் என அடிமைகள் ஒழிப்பின் ஆரம்பத்தில் இஸ்லாம் சொன்னது.
ஒரு முஸ்லிம் தவறுதலாக இன்னொரு முஸ்லிமை கொலை செய்துவிட்டாலோ, அல்லது இறைவனின் பேரில் செய்த சத்தியத்தை முறித்து விட்டாலோ இதுபோன்ற குற்றச் செயல்களுக்கான பரிகாரமாக ‘அடிமைகளை விடுதலை செய்வது’ வழக்கமாகும். இதுபோன்ற செயலை இஸ்லாம் முன்னிலைப்படுத்தி இருப்பது போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.
யார் தன் அடிமையை கன்னத்தில் அறைகின்றாரோ அல்லது அடிக்கின்றாரோ, அந்த அடிமையை விடுதலை செய்வது தான் அதற்கான தண்டனையாகும் என ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
யார் தான் வைத்துள்ள அடிமைப் பெண்ணுக்கு முழுமையான ஒழுக்கத்தை போதித்து தருவதுடன், தேவையான கல்வியையும் நிறைவாக கற்றுத்தந்து, அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்து பின்பாக அந்த அடிமை பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாரோ அவருக்கு இறைவன் மறுமையில் இரண்டு கூலிகள் தருகிறான் என்பது நபிமொழியாகும்.
இப்படியாக அடிமைகள் ஒழிப்பு பிரசார ஊர்வலத்தின் தொடக்கத்தில் இஸ்லாம் முழங்கிய அடிமை விடுதலை வசனங்கள் புரட்சிகரமானது.
அடிமையை மனிதனாக உயர்த்திக் காட்டிட முன் வந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உலகெங்கும் பரவலாக பல நூற்றாண்டுகள் நடைமுறையில் இருந்து வந்த அடிமைப்படுதலையும், அடிமைத்தனத்தையும் இறைவனோடு இணைத்துவிட்டு, மனிதனுக்கு மனிதன் அடிமை என்பதை முற்றிலுமாக ஒழித்து வெற்றிக் கண்ட உலகின் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும்.
ஆதிகாலத்தில் ஆடு, மாடுகளைப் போன்று பிராணிகளாக, ஜடங்களாக கைகளிலும் கால்களிலும் சங்கிலியிட்டு விற்கப்படுகின்ற சந்தையின் விற்பனைப் பண்டங்களாக இருந்த அன்றைய அடிமைத்துவ முறைக்கு வடிகாலாக, விமோசனமாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வருகை அமைந்தது என்பது மானுடத்திற்கான சுயகவுரவமாகும்.
‘ஹஜ்ஜத்துல் விதா’ இது நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க இறுதிப் பேருரையாகும். இந்த உரையில் இன்று சர்வதேசப் பிரச்சினையாக உள்ள பல சிக்கல்களுக்குத் தேவையான அரிய சுமூக தீர்வுகளை பெரும£னார் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்குப் பிரதானப்படுத்தினார்கள் என்பது இஸ்லாமிய உலகத்தால் அறியப்பட்ட ஒன்றாகும்.
‘அரபு மொழி தெரிந்தவருக்கும் தெரியாவதருக்கும் மத்தியில் எந்த வித ஏற்றத் தாழ்வும், சிறப்பும் கிடையாது’. மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். மனிதன் தான் கொண்டிருக்கிற ‘இறையச்சம்’ அடிப்படையில் தான் சிறப்புப் பெறுகிறான் என்ற நாயகத்தின் தீர்க்கதரிசன வார்த்தைகள்.
ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இறைவனின் அடிமைகள் ஆவீர்கள். எனவே ‘உங்களில் யாரும் இது என் அடிமை என்பதாகக் கூட சொல்ல வேண்டாம்’ என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை, பல நாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் என்ற பேரில் அடிமைப்பட்டு கிடக்கிறவர்களை மீட்பதற்காக ஐ.நா. சபையால் ஏற்படுத்தப்பட்ட இந்த சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினத்திற்கான இஸ்லாமிய செய்தியாக சொல்ல
லாம்.
THANKS FOR : மவுலவி எம்.ஏ. முஹம்மது லுத்புல்லாஹ் பிலாலி, பள்ளப்பட்டி.
abu_mahira@yahoo.com
Comments
Post a Comment